மின்துறை தனியார் மயமாக்கம்: புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்


மின்துறை தனியார் மயமாக்கம்: புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
x

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதுவை,

புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும் தனியார்மயத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருந்தபோதிலும் தனியார்மய முடிவில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தது.

இந்தநிலையில் மின்சார வினியோகத்தை 100 சதவீதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை அரசு அதிரடியாக வெளியிட்டது. இது மின்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவை அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலையிலேயே நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மின்துறை ஊழியர்கள், பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை மின்துறை ஊழியர்கள் எழுப்பினார்கள். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று மின்அளவீடு செய்வது, மின்கட்டணம் வசூல், புதிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின் கட்டண வசூல் மையங்கள் அனைத்தும் மூடிக்கிடந்தன.

இந்த நிலையில் புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்கும் அரசின் முடியை எதிர்த்து இன்று மின்வாரிய ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மின்துறை தலைமை அலுவலக பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story