பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - சித்தராமையா உறுதி


பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - சித்தராமையா உறுதி
x

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்வோம் என ராகுல் காந்திக்கு சித்தராமையா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா, மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்ததும் அவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான பல்வேறு ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் கடிதத்திற்கு சித்தராமையா பதிலளித்துள்ளார். அதில், "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதன் மூலமாகவே நமது சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலைநாட்ட முடியும். இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெறுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதையும் நாம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story