தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரையில் வக்கீல் பிரசாந்த் பூஷண் பங்கேற்பு
தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரையில் வக்கீல் பிரசாந்த் பூஷண் பங்கேற்றார்.
ஐதராபாத்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ந் தேதி தெலுங்கானாவை அடைந்தார்.
ராகுல்காந்தியின் 60-வது நாள் பாதயாத்திரை நேற்று நடந்தது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் அல்லதுர்க் என்ற இடத்தில் இருந்து காலையில் நடைபயணம் தொடங்கியது.
பிரசாந்த் பூஷண்
ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் நடந்து சென்றனர். நேற்றைய நடைபயணத்தில், ராகுல்காந்தியுடன் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷணும் கலந்து கொண்டார்.
எஸ்.சி. பிரிவை வகைப்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி தலைவர் மண்ட கிருஷ்ணா மடிகாவும் பங்கேற்றார். மைசூருவை சேர்ந்த சேவாதள தொண்டர்கள், தேசிய கீதத்தையும், தேசிய பாடலையும் பாடிச் சென்றனர்.
பொதுக்கூட்டம்
நேற்றைய பாதயாத்திரை கம்மாரெட்டி மாவட்டத்தில் முடிவடைந்தது. இன்றுடன் (திங்கட்கிழமை) தெலுங்கானாவில் பாதயாத்திரை முடிந்து, மராட்டிய மாநிலத்துக்குள் நுழைகிறது.
அதையொட்டி, கம்மாரெட்டி மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.