அடுத்த 20 - 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் சுழலும்- பிரசாந்த் கிஷோர் கணிப்பு
அடுத்த 20 - 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் சுழலும். பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
புதுடெல்லி
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட வியூகம் வகுத்து கொடுத்தார். அதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார்.
பின்னர், தனது சொந்த மாநிலமான பீகாரில், 'ஜன் சுராஜ்' என்ற பிரசார இயக்கத்தை அவர் தொடங்கினார். அக்டோபர் 2-ந் தேதி முதல் பீகார் முழுவதும் 3 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளப்போவதாக அவர் கூறினார்.அந்த பயணம் அடிப்படையில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மே 13 முதல் 15 வரை ராஜஸ்தான் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் உதய்பூரில் 'சிந்தனை அமர்வு' மாநாட்டை சமீபத்தில் நடத்தியது. அதுபற்றி பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவிக்கும் போது
காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு முக்கிய முடிவுகள் எடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது. இதனால் பழைய நிலையே தொடர்கிறது. குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் கட்சிக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிழ் சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் இந்திய அரசியல் பற்றி அவர் பேசினார். அப்போது பாஜக கட்சியை மையமாக வைத்து தான் இன்னும் 30 ஆண்டுகள் இந்திய அரசியல் சுழலும் என கூறியிருந்தார்.இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயம் அல்லது கருத்தியல் அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் சரிவை சந்திக்கும். இதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது.
இதனால் இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது என நான் கூறவில்லை. ஆனால், அடுத்த 20 - 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் சுழலும். இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால் நீங்கள் அடுத்த 20 - 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது. இதேபோல் தான் தற்போது பாஜக உள்ளது'' என கூறினார்.
அடுத்த 20 - 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் சுழலும். பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.