இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
குடகில் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குடகு-
குடகில் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கர்நாடகத்தில் ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தில் தென்மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குடகிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குடகில் பருவமழை சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சதீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், அனைத்து தாலுகா தாசில்தார்கள், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் சதீஷ் பேசியதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கர்நாடகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. பருவமழை சமயத்தில் குடகு மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. பருவமழையால் ஏற்படக்கூடிய இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இயற்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்பை குறைக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
மழையால் உயிர் சேதம் அல்லது கால்நடை சேதம் ஏற்பட்டால் உடனடியாக அறிக்கை அளித்து தாசில்தார்கள் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்டால் வேளாண் துறை அதிகாரிகள் நஷ்ட மதிப்பீட்டை தயார் செய்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
டெங்கு, சிக்குன்குனியா
குடகு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும். ராஜகால்வாய்களில் தண்ணீர் சீராக செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலையில் மரங்கள் விழுந்தால் அதனை உடனே அகற்ற தேவையான உபகரணங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருவமழை காலத்தில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவாமல் கவனமாக இருக்க சுகாதாரத்துறை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் உஷார் படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலட்சியமாக செயல்படக்கூடாது
மழை காலங்களில் அறுந்துவிழும் மின்கம்பிகள் மற்றும் சாய்ந்து விழும் மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய செஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி, மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இயற்கை பேரிடரை சமாளிக்க நாம் முழுவீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிகாரிகள் யாரும் அலட்சியமாக செயல்பட கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.