கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்; கர்ப்பிணி டிராக்டர் ஏற்றி கொடூர கொலை - நிதி நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்


கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்; கர்ப்பிணி டிராக்டர் ஏற்றி கொடூர கொலை - நிதி நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்
x

கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி நிதி நிறுவன ஊழியர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா. மாற்று திறனாளியான மிதிலேஷ் தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் இன்னும் 1.30 லட்சம் பாக்கி இருந்துள்ளது.

இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷூக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பாக்கி 1.30 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேஷூக்கு நேற்று முன் தினம் பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தனது கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக மிதிலேஷின் 27 வயது மகளும் உடன் சென்றார். மிதிலேஷின் மகள் 3 மாதம் கர்ப்பிணி ஆகும்.

மிதிலேஷ் பெட்ரோல் பங்க் அருகே செல்ல அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முற்பட்டனர். அவர்களை தடுக்க மிதிலேஷின் மகள் முயற்சித்தார்.

ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி மிதிலேஷின் மகள் மீது மோதி அவர் மீது ஏற்றியுள்ளனர். டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின் மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story