ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ருசிகரம்...!


ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ருசிகரம்...!
x

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி வரை வாக்களிக்க நேரம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அசாம், மேற்குவங்காளம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில எம்எல்ஏ கரிமுதீன் பர்புய்யா கூறுகையில்,

''ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். அசாமில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? கட்சி மாறி வாக்களிக்கும் ஆபத்து இருக்கலாம் என்ற பயம் இருந்தது. மொத்தம் 20 எம்எல்ஏக்கள் இருக்கலாம். கட்சியின் முடிவை ஏற்று எத்தனை எம்எல்ஏக்கள் வாக்களித்தனர் என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தான் தெரியும்.'' எனக் கூறினார்.

முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர்,

பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறியுள்ளார். ''நான் மண்ணின் மகளுக்கு வாக்களித்தேன். நான் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஆனால் நான் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்தேன். மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனதைக் கேட்டு அதன்படி வாக்களித்தேன். இது எனது தனிப்பட்ட முடிவு" எனக் கூறினார்.

இதுபோலவே குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிகிறது. அதேசமயம் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் சிலர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களித்துள்ளதாக அம்மாநிலத்தின் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story