10 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு பயணம் ஒடிசா வனவிலங்கு சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார்


10 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு பயணம் ஒடிசா வனவிலங்கு சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார்
x
தினத்தந்தி 5 May 2023 9:15 PM GMT (Updated: 5 May 2023 9:16 PM GMT)

ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார். ஜனாதிபதி பதவி ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு சென்றார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தனது சொந்த ஊரான ரைரங்பூருக்கு சென்றார்.

ஜனாதிபதி பதவி ஏற்ற 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக அவர் சொந்த ஊருக்கு சென்றார். இரவில், அங்குள்ள தனது வீட்டில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ஜனாதிபதி, சந்தால் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர். சந்தாலி மொழியின் கையெழுத்து வடிவத்தை உருவாக்கிய பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

அதையொட்டி, தண்டபோஷ் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். பஹத்பூர் கிராமத்தில், தன்னுடைய கணவர் சியாம்சரண் முர்மு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிமிலிபால் வனவிலங்குகள் சரணாலயத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். இதற்கு முன்பு எந்த ஜனாதிபதியும் அங்கு சென்றது இல்லை.

அவரது வருகையையொட்டி, சரணாலய நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அந்த சரணாலயம் 2 ஆயிரத்து 750 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அங்கு ராயல் பெங்கால் புலிகளும், ஆசிய யானைகளும் உள்ளன. வாகனம் மூலம் ஜனாதிபதிக்கு சரணாலயம் சுற்றி காண்பிக்கப்பட்டது. புலி, மான், யானை உள்ளிட்ட விலங்குகளை அவர் ரசித்து பார்த்தார்.

பரேய்பானி, ஜோரண்டா ஆகிய இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். பரேய்பானி நீர்வீழ்ச்சி, 399 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது. இந்தியாவின் மிக உயரமான 2-வது நீர்வீழ்ச்சி இதுவே ஆகும்.

பின்னர், சிமிலிபாலில் இருந்து பாரிபடாவுக்கு ஜனாதிபதி சென்றார். அங்கு இரவு தங்கினார். இன்று அவர் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, டெல்லி திரும்புகிறார்.


Next Story