புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில், டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்டது.

சுமார் 2 ஆண்டுகளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி திறக்கிறார்

மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கும்போது, மக்களவையில் 1,280 உறுப்பினர்கள்வரை அமரலாம்.

கட்டுமான பணி முடிந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், வருகிற 28-ந் தேதி திறக்கப்படுகிறது. அதை திறந்து வைக்குமாறு பிரதமர் மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

ராகுல்காந்தி எதிர்ப்பு

இந்நிலையில், பிரதமர் மோடி திறக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

திறப்பு விழா தேதியான மே 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

''இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும்.

மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா, ''புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்கக்கூடாதா?'' என்று கேட்டுள்ளார்.

ஒவைசி எம்.பி.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிய கட்டிடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம்.

அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்? என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Next Story