மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி - தேவேந்திர பட்னாவிஸ்


மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி -  தேவேந்திர பட்னாவிஸ்
x

மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாடா சட்ட திருத்தம்

மராட்டியத்தில் செஸ் வரி செலுத்திவரும் 56 கட்டிடங்கள் உள்ளன. இவை வாழ்வதற்கு தகுதியற்ற ஆபாயகரமான கட்டிடங்கள் என கண்டறியப்பட்டாலும் அவற்றை மறுசீரமைப்பதில் சட்டசிக்கல்கள் இருந்தன. இதனால் மறுசீரமைப்பு பணி தடை பட்டது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில் மகாடா சட்டம் 1976-ல் திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மறுசீரமைப்புக்கு வழிவகை

ஜனாதிபதி மகாடா சட்டம் 1976-ல் திருத்தம் செய்ய கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் மாநகராட்சி வாழ்வதற்கு தகுதியற்ற கட்டிடம் என்று அறிவிக்கும் பட்சத்தில், அந்த கட்டிடத்தின் உரிமையாளரோ அல்லது அங்கு குடியிருப்பவர்களோ கட்டிடத்தை மறுசீரமைப்பதற்காக முன்மொழிவை அளிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

குடியிருப்பவர்களோ அல்லது உரிமையாளர்களோ மறுசீரமைப்புக்கு எந்த ஒரு திட்டத்தையும் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் மகாடா அந்த திட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள இந்த சட்டத்திருத்தம் மூலம் அதிகாரம் கிடைத்துள்ளது.

அதன்மூலம் மாநகராட்சியில் உள்ள செஸ் வரி செலுத்தும் கட்டிடங்களில் மறுசீரமைப்பு பணி செய்வதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story