பெங்களூருவில் பழம்-பூக்கள் விலை கடும் உயர்வு
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் பழம்-பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெங்களூரு:-
விலை கடும் உயர்வு
கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னிட்டு பெங்களூருவில் பொதுமக்கள் விநாயகர் சிலைகள், பழம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்தனர். சிட்டி மார்க்கெட்டில் நேற்று காலையில் மக்கள் அதிகளவில் குவிந்ததால், அங்கு வாகன நெரிசல் உண்டானது.
வீட்டில் வைத்து வழிபட சிறிய விநாயகர் சிலைகள், பழம், பூக்களை மக்க்ள வாங்கிச் சென்றனர். இந்த பண்டிகை காரணமாக பழம், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது மல்லிகை கிலோ ரூ.800, கனகாம்பரம் ரூ.1,000, செவ்வந்தி ரூ.150, ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை மட்டுமின்றி பழங்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது திராட்சை கிலோ ரூ.160-ல் இருந்து ரூ.200 ஆகவும், ஆப்பில் ரூ.100-ல் இருந்து ரூ.160 ஆகவும், மாதுளை ரூ.80-ல் இருந்து ரூ.120 ஆகவும், ஏலக்கி வாழைப்பழம் ரூ.80-ல் இருந்து ரூ.120 ஆகவும், சீத்தாப்பழம் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும், வாழைப்பழம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் இருந்தது.
விநாயகர் சிலைகள்
மேலும் பெங்களூரு காந்திபஜார், ஜெயநகர், பசவனகுடி, பனசங்கரி, ராஜாஜிநகர், மல்லேசுவரம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் தற்காலிக பூக்கள், பழங்கள், விநாயகர் சிலை விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.500-க்கும் விற்பனை ஆனது. மேலும் பெரிய விநாயகர் சிலைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன. விலையை பொருட்படுத்தாமல் பண்டிகை கொண்டாட மக்கள் ஆர்வமாக சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
காய்கறி விலை குறிப்பிடும் அளவுக்கு உயரவில்லை. அவை வழக்கமான விலையில் விற்பனையானது. அதாவது பட்டாணி விலை கிலோ ரூ.100, தக்காளி ரூ.15, வெங்காயம் ரூ.30, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80-க்கு விற்பனையானது. மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் விற்பனை குறைவாக உள்ளது. அதனால் காய்கறி விலை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கூறினர்.