மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி


மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி
x

நாட்டில் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தனது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

தனது அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடியும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில் முக்கியமாக சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 11-வது தவணை உதவித்தொகையை விடுவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் சிறப்பம்சங்களை தனது டுவிட்டர் தளத்தில் நேற்று அவர் வெளியிட்டார். இந்த திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த கட்டுரைகள் மற்றும் டுவிட்டர் பதிவுகளையும் மீண்டும் அவர் பகிர்ந்திருந்தார்.

தற்சார்பு இந்தியா

'சிறந்த நிர்வாகத்தின் 8 ஆண்டுகள்' என்ற ஹேஷ்டாக்குடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:-

நம்முடைய அரசு, ஒவ்வொரு இந்தியர் மீதும் அக்கறை கொண்டது. நாங்கள் மக்களை மையப்படுத்திய மற்றும் மனிதாபிமான அணுகுமுறையால் இயக்கப்படுகிறோம்.

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த எங்கள் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவை தற்சார்பு நாடாக உருவாக்க 130 கோடி இந்தியர்களும் முடிவு செய்துள்ளனர். தன்னம்பிக்கைக்கான எங்கள் உந்துதல் உலகளாவிய செழுமைக்கு பங்களிக்கும் ஒரு உயர் எண்ணத்தால் இயக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பல்வேறு கட்டுரைகள்

தனது ஆட்சியின் திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பம்சங்களில் முக்கியமாக, பாகிஸ்தானில் மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராணுவ தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரிப்பு, கொரோனா காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 1.83 கோடி இந்தியர்கள் மீட்பு, பயங்கரவாத தாக்குதல் 52 சதவீதம் குறைந்தது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இதைப்போல உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் முனைப்பில் பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக நமோ செயலியில் வெளியிடப்பட்டு இருந்த கட்டுரையை பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போர்ச்சூழலில் சிக்கிய இந்தியர்களுடன் வெளிநாட்டினரும் மீட்கப்பட்டது தொடர்பான கட்டுரை, அமீரகம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான கட்டுரை, 100-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 20 கோடிக்கு அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கியது தொடர்பான கட்டுரைகளையும் அவர் மீண்டும் வெளியிட்டு இருந்தார்.


Next Story