பெங்களூருவில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு-பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா திகழ்கிறது என்று பெங்களூருவில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
மேலும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் தொடங்கியது. தொடக்க விழா பெங்களூரு அரண்மனை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-
உலக நாடுகள் நம்பிக்கை
கடந்த ஆண்டு(2021) இந்தியாவுக்கு ரூ.6.72 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன. இது கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் போர் நடைபெறுவது போன்ற சூழ்நிலையில் நடந்த சாதனை ஆகும்.
கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் போர் நடைபெறும் நிலையில், உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உலக நாடுகள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை திரும்பி பார்க்கின்றன. உலக பொருளாதாரம் நிலையற்ற சூழ்நிலையில் இருக்கும்போது, இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பதாக உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
தாராள வர்த்தக ஒப்பந்தம்
உலக சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் 130 கோடி இந்தியர்கள், பலமான உள்நாட்டு சந்தை உத்தரவாதம்அளிப்பதாக கருதுகிறார்கள். உலக பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற தன்மையால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் உலக முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்தியா தனது அடிப்படை கொள்கைகள் மூலம் தொடர்ந்து செயல்படுகிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக மாறி இருக்கிறது. சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட தாராள வா்த்தக ஒப்பந்தம், முதலீடுகளை வரவேற்க நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன என்பதை உலக நாடுகளுக்கு காட்டுகிறது. கொரோனாவுக்கு பிறகு பெரிய அளவில் தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.
பொருளாதார கொள்கை
கடந்த 8, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு சரியான பொருளாதார கொள்கை இல்லாமல் சிக்கலில் இருந்தது. இதில் நாட்டை விடுவிக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இதன் மூலம் தேவையற்ற விதிமுறைகளை நீக்கி முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்தோம். அதாவது முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றுவதை தவிர்த்துவிட்டு நியாயமான சட்டங்களை நிறைவேற்றுகிறோம். நாங்களே அதாவது அரசே தொழில் செய்வதற்கு பதிலாக மற்றவர்கள் முன்வந்து தொழில் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இளைஞர்கள் தங்களின் திறனை அதிகரித்து கொள்ள நாங்கள் வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
துணிச்சலான சீர்திருத்தங்கள்
நல்ல திறன், பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் துணிச்சலான சீர்திருத்தங்களால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும். தொழில் முதலீடுகள் மற்றும் மனித வளங்களால் தான் வளர்ச்சியை எட்ட முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனை உலக நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது.
பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான எரிசக்தி துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு அதிகளவில் முதலீடுகள் வந்துள்ளன. மத்தியிலும்-கர்நாடகத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி நடக்கிறது. இது இரட்டை என்ஜின் அரசாக இருப்பதால், கர்நாடகம் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் அன்னிய நேரடி முதலீடுகளும் இந்த மாநிலத்திற்கும் அதிகம் வந்துள்ளன. எளிமையான முறையில் தொழில் தொடங்க வசதி உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
வளர்ந்த நாடாக இந்தியா
கர்நாடகத்தில் 500 பெரிய நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் உள்ள 100 யூனிகார்ன் (ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்), புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் கர்நாடகத்தில் உள்ளன. உலகின் அதிக தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்ட மையமாக கர்நாடகம் திகழ்கிறது. தொழில் நிறுவனங்கள் முதல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை, நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை, புத்தொழில் நிறுவனங்கள் முதல் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் வரை என அனைத்து துறைகளிலும் கர்நாடகம் வளர்ந்து வருகிறது. கர்நாடகம் வளர்ச்சியில் புதிய சாதனை படைத்து வருகிறது.
கர்நாடகம் பிற மாநிலங்களுடன் மட்டுமின்றி சில நாடுகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. திறமை மற்றும் தொழில்நுட்பம் பற்றி எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போது 'பிராண்டு' பெங்களூரு பெயர் மனதில் தோன்றுகிறது. இந்த நிலை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
நாட்டின் உத்வேகம்
இதற்கு முதலீடுகள் மற்றும் நாட்டின் உத்வேகம் ஆகியவை மிக முக்கியம் ஆகும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஜனநாயகம், வலுவான இந்தியா போன்றவை உலகம் வளர உதவும். இந்தியாவில் முதலீடு செய்வது என்பது, உள்ளடக்கியவற்றுக்கு முதலீடு செய்தல், ஜனநாயகத்தில் முதலீடு செய்தல் என்பது அர்த்தம் ஆகும். மேலும் அது நல்ல, தூய்மையான, பாதுகாப்பான கிரகத்திற்கு முதலீடு செய்கிறோம் என்றும் பொருள் ஆகும். இந்த மாநாடு மூலம் கர்நாடகத்துக்கு ரூ.7 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடுகள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பிரகலாத்ஜோஷி, பியூஸ் கோயல், ராஜீவ் சந்திரசேகர், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, மைசூரு மகாராணி பிரமோதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து தங்களின் உற்பத்தி பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளன. குறிப்பாக உயிரி தொழில்நுட்பம் போன்ற முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.