40 சதவீத கமிஷன் வசூல் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்- சித்தராமையா வலியுறுத்தல்


40 சதவீத கமிஷன் வசூல் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்- சித்தராமையா வலியுறுத்தல்
x

கர்நாடக பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் வசூலிப்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் வசூலிப்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிதி ஒதுக்கீடு

கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி கர்நாடகம் வந்து மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. சிறப்பு நிதி வழங்கவில்லை. மக்களுக்கு துரோகம் செய்தார். மைசூரு வங்கியை நால்வடி கிருஷ்ணராஜ உடையார் தொடங்கினார். 1906-ம் ஆண்டு கடலோர மாவட்டத்தில் கார்ப்பரேஷன் வங்கி தொடங்கப்பட்டது. விஜயா வங்கியும் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டது. அந்த வங்கிகள் எல்லாம் வேறு வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

கொரோனா பரவியபோது ஆக்சிஜன் வழங்கவில்லை.சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காததால் 36 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிரதமர் மோடியே காரணம். மோடி பிரதமரான பிறகு கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பங்கு குறைக்கப்பட்டுவிட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டார்.

ஒப்பந்ததாரர் தற்கொலை

15-வது நிதி ஆணையம் கர்நாடகத்திற்கு ரூ.5,495 கோடி நிதி ஒதுக்குமாறு பரிந்துரை செய்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் அதை நிராகரித்துவிட்டார். இவ்வளவு அநீதியை செய்துவிட்டு பிரதமர் மோடி இன்று (நேற்று) கர்நாடகம் வந்து யோகா தினத்தை கொண்டாடுகிறார். அரசின் திட்ட பணிகளில் 40 சதவீத கமிஷன் வசூலிக்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது. இதற்கு அனுமதி வழங்கியது போல் பிரதமர் மோடி மவுனமாக உள்ளார். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் அல்லவா?. நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு

இதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்மையை அதிகரிப்பது மத்திய அரசின் நோக்கமாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்டம் எனது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story