பிரதமர் மோடி 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகை
பிரதமர் மோடி 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வருகிறார். இந்த மாதம் மட்டும் அவர் 2 முறை கர்நாடகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், இங்குள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் நடைபெறும் இந்தியா எனர்ஜி வார விழாவில் கலந்து கொள்கிறார்.
அந்த விழாவை முடித்து கொண்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள பிதரேஹள்ளி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதே நிகழ்ச்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் பெங்களூரு வந்து, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்வார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் விழா இடங்கள் மற்றும் பயணிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.