அனைத்து முதல்-மந்திரிகளுடனும் வரும் 31ந்தேதி பிரதமர் மோடி உரையாடல்


அனைத்து முதல்-மந்திரிகளுடனும் வரும் 31ந்தேதி பிரதமர் மோடி உரையாடல்
x

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து அனைத்து முதல்-மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 31ந்தேதி காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார்.

சிம்லா,

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30ந்தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு மே 30ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்திற்கு செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல்-மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். இதற்காக இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று ரிட்ஜ் மைதானத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமரின் 8 ஆண்டு கால ஆட்சி மிக நல்ல முறையில் நடந்துள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு மாநிலத்திற்கு பிரதமர் வருவது என்பது பெருமைக்குரிய ஒரு விசயம்.

இதற்காக இமாசல பிரதேச மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து முதல்-மந்திரிகளுடனும் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாட இருக்கிறார். பா.ஜ.க.வின் அனைத்து மாவட்ட தலைமையகத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பேசுவார் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story