அரசு முறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தைஇரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு


அரசு முறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தைஇரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு
x
தினத்தந்தி 21 March 2023 12:00 AM GMT (Updated: 21 March 2023 12:00 AM GMT)

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசு முறை பயணமாக நேற்று காலையில் இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு துறைகள் குறித்து குறிப்பாக, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியும், புமியோ கிஷிடாவும் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை வெளியிட்டனர். இதில் பிரதமர் மோடி கூறியதாவது:-

ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியாவும், ஜி7 அமைப்பின் தலைவராக ஜப்பானும் இருக்கும் இந்த நேரத்தில், சர்வதேச நலனுக்காக இரு தரப்பு முன்னுரிமைகளிலும் இணைந்து செயல்பட இது சிறந்த வாய்ப்பாகும்.

ஜி20 தலைவராக இந்தியாவின் முன்னுரிமை நடவடிக்கைகளை ஜப்பான் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இந்தியா-ஜப்பான் இடையேயான சிறப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பானது ஜனநாயக கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீதான மரியாதை அடிப்படையிலானது. இது இந்திய-பசிபிக் பகுதிக்கும் முக்கியமானது. குறிப்பாக, அமைதியான, நிலையான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் பயனளிக்கும் வகையில் இது முக்கியமானது. இருதரப்பு உறவுகளில் குறிப்பாக பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்தோம்.

அரைக்கடத்திகள் மற்றும் பிற முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான வினியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், 'இந்தியாவுடனான ஜப்பானின் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை மேலும் ஆதரிப்பது மட்டுமின்றி ஜப்பானுக்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், சுதந்திரமான மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான தனது திட்டத்தை இந்திய மண்ணில் வெளியிட உள்ளதாகவும் கூறினார். வருகிற மே மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பும் விடுத்தார்.

பின்னர் சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ஜப்பான் பிரதமர் உரை நிகழ்த்தினார். அப்போது சுதந்திரமான மற்றும் விரிவான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான ஜப்பானின் செயல்திட்டங்களை வெளியிட்டார். இதற்காக 4 முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பானுக்கு இந்தியா ஒரு இன்றியமையாத கூட்டாளி என கூறிய புமியோ கிஷிடா, இரு நாடுகளும் தங்கள் உறவுகளிலும், உலக வரலாற்றிலும் தனித்துவமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் சட்டத்தின் ஆட்சியை பராமரிக்க பெரும் பொறுப்பு உள்ளது என்றும் ஜப்பான் பிரதமர் கூறினார்.

உக்ரைன் போர் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சி போன்ற பிரச்சினைகளின் மத்தியில் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ஜப்பான் இருந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் வெளியுறவு, ராணுவ மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமரும் 3 முறை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த புமியோ கிஷிடா, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமருக்கு சந்தனகட்டையில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய சிற்பக்கலையை பிரதிபலிக்கும் இந்த சிலையில் பல்வேறு அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story