எதிர்காலத்துக்கு ஏற்றபடி மாணவர்களை தயார்படுத்த 'பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்' - மத்திய அரசு தகவல்
எதிர்காலத்துக்கு ஏற்றபடி மாணவர்களை தயார்படுத்த ‘பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்கப்படும் என்று கல்வி மந்திரிகள் மாநாட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் காந்திநகரில், கல்வி மந்திரிகளின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
தேசிய கல்வி கொள்கையில், மழலையர் வகுப்பில் இருந்து மேல்நிலை கல்விவரை இடம்பெற்றுள்ளது. 5+3+3+4 என 5-ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்புவரை கல்விமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோர் கல்வி, பள்ளி கல்வியுடன் திறன் மேம்பாட்டை இணைத்தல், தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை ஆகியவை 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப குடிமக்களை தயார்படுத்த செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவை அறிவுசார்ந்த பொருளாதாரமாக மாற்ற அடுத்த 25 ஆண்டு கால கல்வி மிகவும் முக்கியம். இதற்கு ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களையும், வெற்றிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை அறிவுசார்ந்த பொருளாதாரமாக மாற்ற பள்ளி கல்விதான் அடித்தளம் ஆகும். இதை கருத்தில் கொண்டு, 'பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்' என்ற பெயரில் பள்ளிகள் அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த பள்ளிகள், எதிர்காலத்துக்கு ஏற்றபடி மாணவர்களை தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டது. தேசிய கல்வி கொள்கைக்கான ஆய்வுக்கூடமாகவும் இருக்கும். அனைத்து நவீன வசதிகளும் இதில் இருக்கும்.
21-ம் நூற்றாண்டு அறிவு மற்றும் திறன்கள் நமது புதிய தலைமுறைக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க வேண்டும். அதன்மூலம், 'பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்' எதிர்காலத்துக்கான மாதிரி பள்ளிகளாக திகழும்.
பல்வேறு மாநிலங்களில் கல்வியில் பின்பற்றப்படும் நல்ல நடைமுறைகள், நமது மாணவர்களை சர்வதேச குடிமக்களாக மாற்ற ஒட்டுமொத்தமாக உதவும்.
கர்நாடகா, ஒடிசா, டெல்லி, மேகாலயா, பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கல்வி மாதிரிகள் சிறந்த பலன்களை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.