விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் லோகாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத். இவர் கடந்த மார்ச் மாதம் ஒரு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாகல்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அங்கு அவர் விசாரணை கைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிறை வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கைதிகள் அனைவரும் சிறையின் மத்திய பகுதியில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மஞ்சுநாத், அங்கு ஒரு துண்டால் தூக்குப்போட்டுக் கொண்டார். அதைப்பார்த்த சிறை அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாகல்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.