நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி?


நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி?
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த உற்சாகத்தில் இருக்கும் காங்கிரசார், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளதால், மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பிரியங்கா காந்தியும் முக்கிய காரணமாகும். இதனால் பிரியங்கா காந்தியை நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து போட்டியிட வைக்க காங்கிரஸ் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

கர்நாடகத்தில் மைசூரு-குடகு அல்லது உடுப்பி-சிக்கமகளூரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது மைசூரு-குடகு தொகுதியில் பா.ஜனதாவின் பிரதாப் சிம்ஹாவும், உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் மத்திய மந்திரி ஷோபாவும் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதலில், மைசூரு-குடகு தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் உடையாரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாததால் அங்கு பிரியங்கா காந்தியை நிறுத்தலாம் என காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மைசூரு-குடகு தொகுதி பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

ஒருவேளை பிரியங்கா காந்தி மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிட மறுத்தால் அங்கு முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிரியங்கா காந்தி, இளம் வாக்காளர்களை அணுக பொருத்தமானவர் மற்றும் மாநில தேர்தலில் அதிக பிரசாரங்களில் பங்கேற்று வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மைசூரு மற்றும் குடகு மாவட்டங்களில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என காங்கிரஸ் கணக்கிட்டு வருகிறது.

பிரியங்கா காந்தி போட்டியிடுவது தொடர்பாக மைசூரு மற்றும் குடகில் உள்ள உள்ளூர் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story