புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடக்கம்...!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பழைய நாடாளுமன்ற கட்டிட மைய வளாகத்தில் இன்று அனைத்து கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல தலைவர்கள் உரையாற்றினர்.
இதனை தொடர்ந்து பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பிரதமர் மோடி தலைமையில் மந்திரிகள், பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றனர்.
எம்.பி.க்கள் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சென்ற பின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவுக்கு சிறப்பான நேரம் வந்துள்ளது. உலகே வியக்கும் வகையில் ஜி20 மாநாட்டை நடத்தி காட்டியுள்ளோம். விநாயகர் சதுர்த்தியன்று இந்த கூட்டத்தொடரை தொடங்கியிருப்பது சிறப்பானது' என்றார்.