வாட்ஸ்அப் ஹேக்; 6 கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படங்கள்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!!


வாட்ஸ்அப் ஹேக்; 6 கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படங்கள்:  ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!!
x
தினத்தந்தி 7 May 2023 12:06 PM GMT (Updated: 7 May 2023 2:38 PM GMT)

உத்தர பிரதேசத்தில் கல்லூரி பேராசிரியை வாட்ஸ்அப்பை மர்ம நபர் ஹேக் செய்து, கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பி, மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் ஆக்ரா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக இருப்பவர் நசீம். இவரது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு குறுஞ்செய்தி சென்று உள்ளது.

அதன்பின் அந்த கணக்கில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தொடர்ச்சியாக வந்து உள்ளன. இதுபோன்று 6-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு நடந்து உள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், பேராசிரியையிடம் சென்று, முறையிட்டனர். அவரிடம், முகப்பில் உங்களுடைய புகைப்படம் இருந்த வாட்ஸ்அப் கணக்கில் இருந்து எங்களுக்கு செய்தி வந்தது.

அதன்பின்னாலேயே, சில ஆபாச படங்களும் வந்தன என குற்றச்சாட்டாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது என உணர்ந்து உள்ளார்.

இந்த விசயம் பற்றி அவர் சைபர் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார். அதில், தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி சென்றதுடன், அவர்களை சிலர் மிரட்டியும் உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

அந்த எப்.ஐ.ஆர். பதிவில், கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. போலியான வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை, கடந்த ஏப்ரல் இறுதியில் உருவாக்கி, மாணவிகளை அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்பின், மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை பகிரும்படி கூறியுள்ளார். அவர்கள் எண்ணை பகிர்ந்ததும், அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் அந்த நபருக்கு கிடைத்து உள்ளன. மாணவிகளின் தனிப்பட்ட சாட்டிங்குகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து கொண்டு, அவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அனுப்ப தொடங்கி உள்ளார். அவர்களை மிரட்டவும் தொடங்கினார்.

அவர் என்ன கூறுகிறாரோ அதனை செய்யும்படி மிரட்டி உள்ளார். இல்லையென்றால் சாட்டிங் விவரங்களை வைரலாக்கி விடுவேன் என அச்சுறுத்தி உள்ளார்.

இதுபற்றி ஐ.டி. சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிம் கார்டு அடிப்படையில், அந்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் பயந்து போன மாணவிகள் கல்லூரிக்கு செல்லாமல் நிறுத்தி விட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம், பயப்பட வேண்டாம் என கூறி, இந்த விவகாரத்தில் முழு உதவியையும் செய்வோம் என உறுதி கூறியுள்ளனர்.

இதுபற்றி இணையதள பாதுகாப்பு ஆலோசகரான விஷால் சர்மா கூறும்போது, இணையதள குற்றத்தில் ஈடுபடுவதற்காக சிம் கார்டு அடிப்படையில் போலியான ஐ.டி. ஒன்றை உருவாக்கி ஈடுபடுவது இது முதன்முறையல்ல.

கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் நான்கில் ஒரு பகுதி குடும்பங்களை சேர்ந்தவர்கள், இதுபோன்ற பெரிய அல்லது சிறிய அளவிலான இணையதள குற்றங்களில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. அதனால், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆக்ரா நகர போலீசார் சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் இதற்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றையும் நடத்தி உள்ளனர். இளைஞர்களுக்கு அதுபற்றிய எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். சமூக அமைப்புகள் இந்த விவகாரம் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story