அசாமில் இறந்து பிறந்ததாக கூறப்பட்ட குழந்தை மயானத்தில் கண் விழித்தது


அசாமில் இறந்து பிறந்ததாக கூறப்பட்ட குழந்தை மயானத்தில் கண் விழித்தது
x

அசாமில் இறந்து பிறந்ததாக கூறப்பட்ட குழந்தை மயானத்தில் கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திஸ்பூர், -

அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரை சேர்ந்தவர் ரத்தன் தாஸ். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, ரத்தன் தாஸ் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள், தாய் அல்லது குழந்தை யாராவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் கூறிவிட்டனர். அதனை தொடர்ந்து ரத்தன் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் அனுமதியோடு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தாய் நலமாக இருப்பதாகவும், குழந்தை இறந்தே, பிறந்ததாகவும் டாக்டர்கள் கூறினர்.

பின்னர் மறுநாள் காலை அந்த ஆண் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, இறப்பு சான்றிதழுடன் ரத்தன் தாஸ் குடும்பத்தினரிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒப்படைத்தது.

அதனை தொடர்ந்து, இறுதி சடங்குக்காக குழந்தையை மயானத்துக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் பிளாஸ்டிக் கவரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது குழந்தை அழ தொடங்கியது. இதை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

இறுந்துவிட்டதாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது.

இதனிடையே குழந்தை இறந்துவிட்டதாக கூறிய தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story