கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்; நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்; நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

நடிகர் சுதீப்புடன் பேச்சு

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. நடிகையும், சுமலதா எம்.பி.யையும் பா.ஜனதாவில் சேர்க்க நடந்த முயற்சிகள் வெற்றி பெற்றது. இதையடுத்து, சுமலதாவும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுபோல், கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியும் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், நடிகர் சுதீப்பும் இணைந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு

நான் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எனக்கு ஆதரவாக இருந்திருந்தார். கஷ்ட நேரத்தில் எனக்கு தேவையான உதவிகளையும் அவர் செய்து கொடுத்திருந்தார். நான் சிறுவயதில் இருந்தே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாமா என்று தான் அழைத்து வருகிறேன். எனக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யும்படி பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார்.

அதன்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வேன். அவர், எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்ய சொல்கிறாரோ, அங்கு நான் பிரசாரம் செய்வேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சியை பார்த்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. பசவராஜ் பொம்மை என்ற ஒரு நபருக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.

அரசியலுக்கு வர மாட்டேன்

சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் போட்டியிடவில்லை. அரசியலுக்கும் வர மாட்டேன். வேறு கட்சியில் இருந்து யாராவது பிரசாரத்திற்காக அழைத்தாலும், அவர்களுக்காகவும் பிரசாரம் செய்வேன். கன்னட சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். எனது ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இந்த அன்பு எப்போதும் தொடரும். கன்னட சினிமாவில் நான் இன்னும் செய்ய வேண்டியது நிறயை இருக்கிறது.

நான் கஷ்ட காலத்தில் இருந்த போது உதவியவர்களுக்காக (பசவராஜ் பொம்மை), அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் எல்லா கட்சிகளிலும் எனக்கு தெரிந்தவர்கள், ரசிகாகள் இருக்கிறாாக்ள். எனக்கு வேண்டிய நலம் விரும்பிகளும் இருக்கிறார்கள். நான் தேர்தலில் போட்டியிட இருந்தால், அதுபற்றி கண்டிப்பாக தெரிவிப்பேன்.

அடிபணிய கூடிய நபரா?

பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டதா? என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். எந்த வருமான வரித்துறை சோதனை நடத்தினாலும், என்னிடம் எதுவும் சிக்க போவதில்லை. ஏற்கனவே சோதனை நடந்து முடிந்துள்ளது. நான் எந்த அழுத்தத்திற்கு அடி பணிய கூடிய நபரா?. அப்படி இருக்கும் போது வருமான வரித்துறைக்கு நான் ஏன் பயப்பட வேண்டும். இதற்கெல்லாம் பயப்படுவன் நான் இல்லை.

எனது மாமாவுக்கு நான் உதவி செய்வதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தி இருந்தேன். அவர் மீது இருக்கும் அன்புக்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எல்லா தொகுதிகளுக்கும் சென்று என்னால் பிரசாரம் செய்ய முடியாது. பசவராஜ் பொம்மை கூறும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு நடிகர் சுதீப் கூறினார்.

பா.ஜனதாவில் சேரவில்லை

நடிகர் சுதீப் பேசும் போது பா.ஜனதா கட்சியில் சேர இருப்பது பற்றியும், பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்பது பற்றியும் சுதீப் எதுவும் பேசவில்லை. மாறாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாகவும், அவர் கூறும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்வேன் என்று கூறினார். இதன்மூலம் நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேருவதில்லை. அரசியலுக்கு வந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

வால்மிகி சமுதாயத்தை சேர்ந்தவர் தான் நடிகர் சுதீப். இதனால் அந்த சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் நடிகர் சுதீப்பை பிரசாரம் செய்ய பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது.

பா.ஜனதாவுக்கு பலம்

முன்னதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் சுதீப் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறியுள்ளார். அவருடைய முடிவை அவர் அறிவித்துள்ளார். இதற்கு உண்மையான அர்த்தம், அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது ஆகும். நடிகர் சுதீப்பின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். சுதீப் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறி இருப்பது குறித்து தற்போதே பலரும் பேச தொடங்கி உள்ளனர்.

சுதீப்பின் பிரசாரம் மூலமாக பல்வேறு தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு நல்ல ஆதரவு கிடைக்க உள்ளது. சுதீப்பின் இந்த அறிவிப்பால் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. நான் சொல்லும் தொகுதிகளில் நடிகர் சுதீப் பிரசாரம் செய்வார். அவர் பிரசாரம் செய்வதற்கான நேரம் அனைத்தும் தயார் செய்யப்படும். ஏனெனில் அவர் மிகப்பெரிய நடிகர். அவருக்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். வரும் நாட்களில் இநத விவகாரம் பற்றி விரிவாக பேசுகிறேன், என்றார்.


Next Story