நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நீர்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால் வேளாண்துறை வேகமாக வளர்ச்சி பெறும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீர் சேமிப்புத் துறையில் பயன்படுத்த வேண்டும். தொழில் மற்றும் விவசாயம் என்பது தண்ணீர் தேவைப்படும் இரண்டு துறைகள்.
ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறியுள்ளது என குறிப்பிட்டார். நமது அரசியலமைப்பு அமைப்பில், தண்ணீர் பொருள் மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் முயற்சிகள் நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதில் நீண்ட தூரம் செல்லும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.