ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' படத்தை திரையிட எதிர்ப்பு; தியேட்டரில் பேனர்களை கிழித்து இந்து அமைப்பினர் போராட்டம்


ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தை திரையிட எதிர்ப்பு; தியேட்டரில் பேனர்களை கிழித்து இந்து அமைப்பினர் போராட்டம்
x

ஷாருக்கான நடித்துள்ள ‘பதான்’ படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்ததுடன், தியேட்டரில் இருந்த பேனர்களை கிழித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

பெங்களூரு:

ஷாருக்கான நடித்துள்ள 'பதான்' படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்ததுடன், தியேட்டரில் இருந்த பேனர்களை கிழித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

'பதான்' படத்திற்கு எதிர்ப்பு

நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோேன நடித்துள்ள திரைப்படம் 'பதான்'. இந்த படம் நாடு முழுவதும் நேற்று வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் உடை அணிந்திருப்பதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

கர்நாடகத்திலும் நேற்று ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் கடேபஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று பதான் படம் வெளியானது. ஆனால் பதான் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பேனர்கள் கிழிப்பு

நடிகர் ஷாருக்கானுக்கு எதிராகவும், படத்தை திரையிடக்கூடாது என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டு இருந்த பதான் படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடேபஜார் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரை பிடித்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அந்த தியேட்டர் முன்பு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் பேனர்களை கிழித்ததாக இந்து அமைப்பினர் 30 பேர் மீது கடேபஜார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவிலும் ஷாருக்கானின் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பேனரை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story