கவுகேரி-கொக்கேரி சாலையை சீரமைக்க கோரி போராட்டம்


கவுகேரி-கொக்கேரி சாலையை சீரமைக்க கோரி போராட்டம்
x
தினத்தந்தி 27 March 2023 10:45 AM IST (Updated: 27 March 2023 10:53 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரி அருகே கவுரிகேரி-கொக்கேரி சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

குடகு-

மடிகேரி அருகே கவுரிகேரி-கொக்கேரி சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

குண்டும் குழியுமான சாலை

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது கவுகேரி கிராமம். இந்த கவுகேரி கிராமத்தில் இருந்து கொக்கேரி கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையை சீரமைக்கும்படி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் நேற்று கவுகேரி-கொக்கேரி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

20 ஆண்டுகள்....

அப்போது போராட்டகாரர்கள் கூறியதாவது:-

கவு கேரியில் இருந்து கொக்கேரி வரை 5 கி.மீ மாவட்ட பஞ்சாயத்திற்குட்பட்ட சாலை அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் இதை சீர் செய்யவேண்டும். மீதமுள்ள சாலைகள் கிராம பஞ்சாயத்திற்குட்பட்டது. இதை கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் சீரமைக்கவேண்டும். ஆனால் மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் இந்த சாலையை சீரமைப்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. தொடர்ந்து நாங்கள் முறையிட்டு வருகிறோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 ஆண்டாக இதே நிலைத்தான் நடித்து வருகிறது. பல முறை கிராம மக்களே சாலையை சீரமைத்திருக்கிறார்கள்.

இதை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தற்போது தேர்தல் நெருங்கிவிட்டது. மக்களின் வாக்கு அவர்களுக்கு தேவையாக உள்ளது. இந்த நேரம் மக்கள் பிரதி நிதிகள் கவனத்திற்கு இதை எடுத்து செல்லவில்லை என்றால் இந்த சாலையை சீரமைக்க முடியாது. மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் இந்த மக்கள் இதேபோலத்தான் பாதிக்கப்படவேண்டியிருக்கும். எனவே இதற்கு அதிகாரிகள் உடனே தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட அதிகாரிகள் விரைவில் சாலையை சீரமைத்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story