பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்த விவசாயிகள் ரெயில் மறியல்; 400 ரெயில்கள் ரத்து


பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்த விவசாயிகள் ரெயில் மறியல்; 400 ரெயில்கள் ரத்து
x

பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் நிறைவு பெற்றது. போராட்டம் காரணமாக சுமார் 400 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்மான உறுதி, பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 28-ந்தேதி பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

அமிர்தசரஸ், ஜலந்தர், மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், பெரோஸ்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்தும், படுத்து கிடந்தும் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

3-வது நாளாக ரெயில் மறியல்

இந்த போராட்டம் 30-ந்தேதி (நேற்று) வரை நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதன்படி 3-வது நாளாக நேற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் இந்த போராட்டாத்தினால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 3 நாட்களில் சுமார் 600 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

அதேபோல் சுமார் 400 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 89 ரெயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டதாகவும் கூறிய ரெயில்வே அதிகாரிகள் 70 ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

உருவபொம்மை எரிப்பு போராட்டம்

லூதியானா ரெயில் நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் விவசாயிகளின் போராட்டத்தால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் அமிர்தசரசிலிருந்து பீகார் செல்லும் தங்களின் பயணத்தை ரத்து செய்யும் நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர் என்று வேதனை தெரிவித்தார்.

இதனிடையே விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி நேற்றுடன் அவர்களது ரெயில் மறியல் போராட்டம் நிறைவுக்கு வந்தது. தசராவுக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மத்திய அரசின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.


Next Story