தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
x

கோப்புப்படம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் வந்தன. 2013-ம் ஆண்டு மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதை போன்ற கதி சரத்பவாருக்கு ஏற்படும் என்று பேஸ்புக் கணக்கில் ஒருவர் பதிவிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்தநிலையில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புனேயில் ஒருவரை கைது செய்தனர். கைதானவர் பெயர் சாகர் பார்வே என்றும், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய இரு வலைத்தள கணக்குகள் மூலமும் சாகர் பவார் தான் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை மும்பை அழைத்து வந்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பின்னணி குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story