அதார் பூனாவாலா என கூறி சீரம் நிறுவனத்திடம் ரூ.1 கோடி மோசடி
அதார் பூனாவாலா என கூறி அவரது சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே. இவருக்கு கடந்த புதன், வியாழன் கிழமை மதியம் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். அவர் அவசரமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 554 தேவைப்படுவதாக கூறினார்.
வாட்ஸ்அப்பின் முகப்படமாக அதார் பூனாவால படம் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அதார் பூனாவாலா தான் தன்னிடம் பணம் கேட்பதாக சதீஷ் தேஷ்பாண்டே நினைத்தார். இதையடுத்து அவர் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு நிறுவன அதிகாரிகள் மூலமாக பணத்தை அனுப்பினார்.
ஆனால் பணம் அனுப்பிய பிறகு தான், அதார் பூனாவால பணம் கேட்டு வாட்ஸ் அப்பில் எந்த குறுந்தகவலும் அனுப்பவில்லை என்பது தெரியவந்தது. மோசடி கும்பல் அதார் பூனாவாலா என கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சீரம் நிறுவனம் சார்பில் மோசடி குறித்து புனே பந்த்கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சீரம் நிறுவன உரிமையாளர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.