பஞ்சாப்: அம்ரித்பால் சிங் விவகாரத்தில் மாமா, வாகன ஓட்டுனர் போலீசில் சரண்
பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங் விவகாரத்தில் அவரது மாமா மற்றும் வாகன ஓட்டுனர் பென்ஸ் காரில் வந்து போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் நடிகர் தீப் சித்து என்பவரால் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை தற்போது, அம்ரித்பால் சிங் என்பவர் நடத்தி வருகிறார். நடிகர் தீப் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.
கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான, கடத்தல் வழக்கில் குற்றவாளியான லவ்பிரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தபோது பரபரப்பு ஏற்பட்டது. அவரை விடுவிக்க கோரி போராட்டம் நடந்தது.
அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் காணப்பட்டனர்.
அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதன்பின்னர், அம்ரித்பாலின் முக்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் விடுவிக்கப்படுவார் என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த வன்முறைக்கு பஞ்சாப் போலீசாரே காரணம் என பின்னர் அம்ரித்பால் குற்றச்சாட்டாக கூறினார். இந்த வன்முறையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என்ற விவரங்களை கூட போலீசார் வெளியிடவில்லை.
எனினும், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது என பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி பகவந்த் மான், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கூறினார். இதன்பின், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்ரித்பாலின் நிதி தொடர்பான விசயங்களை கவனித்து கொள்ளும் தல்ஜீத் சிங் கால்சி என்பவர் அரியானாவின் குர்காவன் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு அம்ரித்பாலை கைது செய்ய தீவிரப்படுத்தப்பட்டது. இறுதியில் பாதுகாப்பு வாகனங்களுடன் ஜலந்தரின் ஷாகோட் பகுதியை நோக்கி சென்ற அவர், கடைசியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். போலீசில் அவர் சிக்காத நிலையில், தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டார்.
எனினும், வன்முறை பரவி விடாமல் தவிர்க்க நேற்று மதியம் 12 மணிவரை பஞ்சாப்பில் இணையதள வசதி முதலில் முடக்கப்பட்டது. ஏனெனில் அம்ரித்பாலின் உதவியாளர்கள் ஷாகோட் பகுதிக்கு திரண்டு வரும்படி, அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து, வீடியோ வெளியிட்டனர்.
இதேபோன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் அம்ரித்பாலின் சொந்த ஊரான ஜல்லுப்பூர், கைரா கிராமத்தில் போலீசார், துணை ராணுவ படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டும் உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங் விவகாரத்தில் அவரது மாமா மற்றும் வாகன ஓட்டுனர் போலீசில் நேற்றிரவு சரண் அடைந்து உள்ளனர்.
இதுபற்றி ஜலந்தர் நகர்ப்புற சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு சுவர்ணதீப் சிங் கூறும்போது, வாரீஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மாமா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் போலீசில் சரண் அடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.
அஜ்னாலா சம்பவத்தில் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரும் மெஹாத்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து உள்ளனர். பின்னர் அவர்களாகவே முன்வந்து போலீசில் சரண் அடைந்தனர்.
இதனை போலீசார் உறுதி செய்து உள்ளனர். தொடர்ந்து பென்ஸ் காரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதற்கு முன், அம்ரித்பால் சிங் தப்பியோடியபோது விட்டு சென்ற வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றுடன் பல்வேறு வாகனங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 112 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று ஒரு நாளில் 34 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்காக தேடும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பஞ்சாப் மாநில உள்துறை மற்றும் நீதி துறை வெளியிட்ட செய்தியில், பஞ்சாப்பில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அனைத்து மொபைல் போன் வழியேயான இணையதள சேவைகள், அனைத்து எஸ்.எம்.எஸ். சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் தவிர்த்து) மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் வழியேயான அனைத்து சேவைகளும் (குரல் அழைப்புகள் தவிர்த்து) இன்று மதியம் (மார்ச் 20, 12 மணி) வரை முடக்கப்படுகிறது என அறிவித்து உள்ளது.
எனினும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களிடையே நம்பிக்கையூட்டவும், பல்வேறு நகரங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.