பஞ்சாப்: ராணுவ தளத்தில் மற்றொரு துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்


பஞ்சாப்:  ராணுவ தளத்தில் மற்றொரு துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்
x

பஞ்சாப் ராணுவ தளத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மரணம் அடைந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பதிண்டா,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ள அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது.

உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் யாரும் உள்ளே இல்லை.

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (வயது 24), யோகேஷ் குமார் (வயது 24) மற்றும் சந்தோஷ் நகரல் (வயது 25) என்று தெரிய வந்தது.

சாப்பாட்டு கூடத்துக்கு பின்னால் அவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இவர்களில் கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24) ஆகிய 2 பேரும் முறையே சேலம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்து உள்ளது.

இது பயங்கரவாத தாக்குதல் போல் இல்லை என இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. காணாமல் போன இன்சாஸ் ரைபிள் துப்பாக்கிக்கு இதனுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பதிண்டா ராணுவ தளத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ பிரிவு அலுவலகம் அமைந்த பகுதியில், காவல் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர் ஒருவர் தலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கீழே கிடந்து உள்ளார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

அவர் குர்தேஜஸ் லகுராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசிடம் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வீரரின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அடுத்தடுத்து, ராணுவ முகாமில் வீரர்கள் சுட்டு கொல்லப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story