அமெரிக்காவில் இந்திய குடும்பம் படுகொலை: உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதல் மந்திரி கோரிக்கை
துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
சண்டிகர்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமை அன்று ஜஸ்தீப் சிங், 27 வயதான அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், அவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோரை மெர்சிட் கவுண்டி வணிகப் பகுதியில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
குடும்பத்தைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உறவினர்களால் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடும்பம் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட நான்கு பேரையும் இறந்த நிலையில் காவல்துறையினர் நேற்று சடலமாக கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக 48 வயதான ஜீசஸ் மானுவல் சல்காடோ என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கலிபோர்னியாவில் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கொலை வேதனை அளிக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.