பஞ்சாப் பாடகர் படுகொலை; கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்பு


பஞ்சாப் பாடகர் படுகொலை; கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்பு
x

பஞ்சாப் பாடகர் சித்து படுகொலைக்கு கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் என்ற தேடப்படும் குற்றவாளி பொறுப்பேற்று உள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப்பின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா (வயது 27). இவர் ஜீப்பில் ஜவகர் கே கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த சித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்துவின் மறைவுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மூஸ்வாலாவுக்கு வழங்கி வந்த பாதுகாப்பினை பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, திரும்ப பெற்ற 2 நாட்களில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது என கூறி, பஞ்சாப்பில் அந்த அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் மன்சா தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவிடம் மூஸ்வாலா தோல்வி கண்டார். எனினும், சிங்லா மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் முதல்-மந்திரி பகவந்த் மான் அவரை சுகாதார மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

சித்து படுகொலைக்கு கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்று அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். சதீந்தர் சிங் என்ற பெயருடைய கோல்டி பிரார் கடந்த காலங்களில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி தலைவர் குர்லால் சிங் பெகல்வான் படுகொலையில் உள்ள தொடர்புக்காக பிரார் மீது பரீத்பூர் நீதிமன்றம் ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் ஒன்றை இந்த மாத தொடக்கத்தில் பிறப்பித்தது.

சித்து படுகொலையில் பிராரின் நெருங்கிய கூட்டாளியான கொள்ளை கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

சித்து கொல்லப்பட்ட பின்பு நடந்த முதற்கட்ட விசாரணையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ நாளன்று சித்து, குண்டு துளைக்காத காரை எடுத்து செல்லவில்லை. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரையும் உடன் அழைத்து செல்லவில்லை என மன்சா போலீஸ் சூப்பிரெண்டு கவுரவ் தூரா கூறியுள்ளார்.


Next Story