ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் புஷ்கர விழா, திரிசூல ஸ்நானம் - திரளான பக்தர்கள் புனிதநீராடினர்


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் புஷ்கர விழா, திரிசூல ஸ்நானம் - திரளான பக்தர்கள் புனிதநீராடினர்
x

பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப, அர்ச்சகர்கள் திரிசூலத்தை ஆற்றின் புனித நீரில் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று புஷ்கர உற்சவமும், அதையொட்டி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானமும் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று சாஸ்திர ஆகமவிதிபடி கோவிலில் புஷ்கர உற்சவமும், சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானமும் நடந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் சங்கல்ப பூஜையை தொடங்கி யாக சாலையில் ஏற்பாடு செய்து வைத்திருந்த திரிசூலம், உமாதேவி சமேத சந்திரசேகரருக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். கோவில் வேதப் பண்டிதர்கள் சத்வோ முக்தி விரதப் பூஜையின் சிறப்பை பக்தர்களுக்கு விவரித்தனர். அதைத்தொடர்ந்து திரிசூலத்தை கோவில் அர்ச்சகர்கள் சொர்ணமுகி ஆற்றுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது 'ஓம் நமச்சிவாய', 'ஹர ஹர மகாதேவா' எனப் பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப, அர்ச்சகர்கள் திரிசூலத்தை ஆற்றின் புனித நீரில் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். அப்போது ஆற்றில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் நீரில் மூழ்கி புனிதநீராடினர். பின்னர் உற்சவமூர்த்திகளுக்கு தீப தூப நெய்வேத்தியங்களை சமர்ப்பித்து, சொர்ணமுகி ஆற்றில் இருந்து கோவிலுக்கு திரும்பினர்.


Next Story