ராகுல், அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்


ராகுல், அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM GMT (Updated: 18 May 2023 12:15 AM GMT)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அங்கு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது, இது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் அவர் வரும் 31-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, அவர் அடுத்த மாதம் 4-ந் தேதி நியூயார்க் மேடிசன் சதுக்கம் கார்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்.

இந்தக் கூட்டத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அவர் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவுக்கும் செல்ல உள்ளார். கலிபோர்னியாவில் உள்ள பழமையான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் அவர் கலந்துரையாட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ராகுல் காந்தி அமெரிக்க நாட்டின் அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக பேசியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.

பிரதமர் மோடி அமெரிக்காவில் அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதும், 22-ந்தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன், அவருக்கு விருந்து அளித்து கவுரவிப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story