ராகுல் காந்திக்கும், கடவுள் ராமருக்கும் முதல் எழுத்து ஒன்றே; மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேச்சு


ராகுல் காந்திக்கும், கடவுள் ராமருக்கும் முதல் எழுத்து ஒன்றே; மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேச்சு
x

கடவுள் ராமரின் பெயரில் ஆர் என்ற எழுத்து இருப்பது போல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் உள்ளது என மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பேசியுள்ளார்.



புனே,


அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை அங்கிருந்து கேரளா சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அதே மாதம் 30-ந்தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. தொடர்ந்து பாதயாத்திரையில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் நேற்று அக்கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு பதிவும் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை வெளியிடப்படும்.

இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை இலக்காக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இதுபற்றி சொந்த கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு விசயங்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் கோவா மாநில முன்னாள் முதல்வரான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா பேசும்போது, பாதயாத்திரையை நிறுத்திவிட்டு ராகுல் காந்தி குஜராத்துக்கு செல்ல வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக உள்ள பர்சதி லால் மீனா பேசும்போது, ராகுல் காந்தியின் பாதயாத்திரை வரலாறு படைக்கும்.

கடவுள் ராமர் கூட அயோத்தியாவில் இருந்து இலங்கை வரை வெறுங்காலால் நடந்தே சென்றார். ராகுல் காந்தி அதனை விட கூடுதலாக நடக்கிறார். அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்து செல்கிறார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கடவுள் ராமர் மற்றும் சங்கராச்சாரியார் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். எண்ணற்ற மக்கள் அதில் இணைந்து வருகின்றனர். கடவுள் ராமருடன் எந்த ஒப்பிடுதலும் கொண்டு வரப்படவில்லை. ஆனால், அவர்களது பெயர்களின் முதல் எழுத்து ஒரே எழுத்தில் தொடங்குகிறது.

ராமரின் பெயரில் ஆர் என்ற எழுத்து இருப்பது போல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் உள்ளது. தற்செயலாக அது ஒன்றாக உள்ளது. நாங்கள் ஒப்பீடு எதுவும் செய்யவில்லை. ஆனால் பா.ஜ.க., தங்களது தலைவர்களுக்காக இந்த ஒப்பீட்டை செய்து வருகிறது என நானா பட்டோலே பேசியுள்ளார்.

கடவுள், கடவுளாக இருக்கிறார். நாம் மனிதர்கள். மனிதகுல நன்மைக்காக ராகுல் காந்தி பணியாற்றி வருகிறார். அவரது பாதயாத்திரை மூவர்ணம் மற்றும் மனிதகுலம் ஆகியவற்றை காப்பாற்றும் என நான் உணருகிறேன் என்றும் பட்டோலே பேசியுள்ளார்.



Next Story