விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி - எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக போராட்டம்
அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டியதால் இரு சபைகளிலும் அமளி நிலவியது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டன. பணவீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், விவாதம் நடத்த காங்கிரஸ் தயராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் குணமாகி வந்த உடன் இது குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தை செயல்படவிடால் முடக்க வேண்டும் எனும் நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.