இங்கிலாந்து பயணத்திற்கு ராகுல்காந்தி மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை?


இங்கிலாந்து பயணத்திற்கு ராகுல்காந்தி மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை?
x
தினத்தந்தி 25 May 2022 7:14 PM IST (Updated: 25 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். லண்டனில் 'இந்தியாவுக்கான திட்டங்கள்' என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்காந்தி இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் குறித்து பேசினார். மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு நிலைப்பாடுகள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ராகுல் காந்தி தனது பயணத்திற்கான உரிய அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, பாராளுமன்ற எம்.பி. ஒருவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவேண்டுமானால் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளிக்கும். மேலும், அந்த எம்.பி.யின் பயண விவரம் குறித்த தகவலை பயணத்திற்கு 3 வாரங்களுக்கு முன்னதாகவே வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடும்.

அதேபோல், வெளிநாட்டு அரசாங்கங்கள், வெளிநாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை இந்திய எம்.பி.யை தங்கள் நாட்டிற்கு, அமைப்பிற்கு அழைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமே அழைப்பு விடுக்க வேண்டும்.

எம்.பி. நேரடியாக அழைக்கப்படும் பட்சத்தில் அந்த அழைப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு, மத்திய அரசின் அரசியல் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது இங்கிலாந்து பயணம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் குறித்தும், பாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்தும் பல்வேறு கருத்துக்களை லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் - ராகுல்காந்தி


Next Story