தகுதி நீக்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு - மத்திய அரசு மீது கார்கே தாக்கு
பா.ஜனதா எம்.பி. மீது நடவடிக்கை இல்லை என்றும் தகுதி நீக்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளதாகவும் கார்கே தெரிவித்தார்.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மறுநாளே பறிக்கப்பட்டது. அதேநேரம் குஜராத்தின் அம்ரேலி தொகுதி பா.ஜனதா எம்.பி. நரன்பாய் கச்சாடியா 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றபோதும் அவரது எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அவரது தண்டனையை பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்திருந்தாலும் இடையில் அவர் எம்.பி.யாக தொடர்ந்ததை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'மோடி அரசின் பாசாங்கு மற்றும் இரட்டை நிலைப்பாட்டின் உச்சம். குஜராத்தை சேர்ந்த ஒரு பா.ஜனதா எம்.பி. உள்ளூர் கோர்ட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெறுகிறார். செசன்ஸ் கோர்ட்டு, ஐகோர்ட்டு அதை உறுதி செய்கிறது. ஆனால் 16 நாட்களுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ராகுல் காந்தி மட்டும் மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்' என சாடியுள்ளார்.