மணிப்பூரில் 2-வது நாளாக நிவாரண முகாம்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவு காட்டிய ராகுல்
மணிப்பூரில் ராகுல் காந்தி 2-வது நாளாக, நிவாரண முகாம்களுக்குச்சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, பரிவுடன் அவர்களது துயரங்களைக் கேட்டறிந்தார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் ராகுல் காந்தி 2-வது நாளாக, நிவாரண முகாம்களுக்குச்சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, பரிவுடன் அவர்களது துயரங்களைக் கேட்டறிந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் மெய்தி மற்றும் நாகா, குகி இனத்தவரிடையே மோதல்கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்டோரைப் பலி கொண்ட இந்த மோதல்கள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளில், பாதிப்புக்குள்ளானோரைச் சந்தித்து நேரில் ஆறுதல் கூற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரும்பினார். இதற்காக அவர் அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் அவர் இம்பால் சென்றடைந்து, கலவரம் பாதித்த சுரக்சந்த்பூருக்கு சாலை வழியாக புறப்பட்டுச்சென்றபோது, பிஷ்ணுப்பூர் என்ற இடத்தில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரை அங்கு செல்ல அனுமதிக்கக்கோரி உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
தொடர்ந்து ராகுல் ஹெலிகாப்டரில் சுரக்சந்த்பூருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், 2-வது நாளான நேற்று ராகுல் காந்தி, இம்பாலில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள பிஷ்ணுப்பூர் மாவட்டத்தின் மொய்ராங்க் நகருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க விரும்பினார். நேற்றும் அவருக்கு சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவர் ஹெலிகாப்டரில் அங்கு வந்தார்.
ராகுல் காந்தி முதலில் அங்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது வாகன அணிவகுப்பு மொய்ராங்க் சென்றடைய இருந்த தருணத்தில் அந்த அனுமதி ரத்தானதாகவும் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திர சிங் தெரிவித்தார்.
மொய்ராங்க் நகரில் உள்ள 2 நிவாரண முகாம்களுக்கு ராகுல் காந்தி சென்று அங்கு தங்கியிருப்போரைச் சந்தித்து பேசினார். அவர்களின் துயரங்களை பரிவுடன் கேட்டறிந்தார். இரு முகாம்களிலும் ஏறத்தாழ 1,000 பேரை ராகுல் காந்தி சந்தித்து கலந்துரையாடியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியுடன் மணிப்பூர் மாநில முன்னாள் முதல்-மந்திரி இபோபி சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திர சிங், முன்னாள் எம்.பி. அஜய்குமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்த மொய்ராங்க் நகரில், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவம், 1944-ம் ஆண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தது, வரலாற்றுச்சுவடாக அமைந்துள்ளது.
ராகுல் காந்தி, இம்பாலில் மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக்குழு, ஒரு சிவில் சமூக அமைப்பு, ஐக்கிய நாகா கவுன்சில், பழங்குடியினர் கோரிக்கை குழு போன்றவற்றின் பிரதிநிதிகள் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பிமோள் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
மணிப்பூரில் மீண்டும் அமைதியை மீட்டெடுப்பது குறித்து அவர்களிடம் அவர் விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.