லண்டனில் இந்தியாவை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார்


லண்டனில் இந்தியாவை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார்
x

ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கருத்து கூறியிருந்த நிலையில் லண்டனில் இந்தியாவை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பெங்களூரு:-

அனுபவ மண்டபம்

தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

நான் பகவான் பசவேஸ்வராவின் மண்ணுக்கு வந்துள்ளேன். இதனால் நான் ஆசிர்வதிக்கப்பட்டராக உணர்கிறேன். பசவேஸ்வரா இந்த சமுதாயத்திற்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கினார். அதில் அனுபவ மண்டபத்தை அமைத்தது முக்கியத்துவம் வாய்ந்தது. 12-வது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த ஜனநாயக அமைப்பு குறித்து உலக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன.

இந்தியாவின் ஜனநாயகம்

அதனால் தான் இந்தியா பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாகவும் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நான் பசவவேஸ்வராவின் சிலையை திறந்து வைத்தேன். அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும். பசவேஸ்வராவின் சிலை லண்டனில் இருக்கும் நிலையில் அதே லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஜனநாயக ஆணிவேர் வரலாற்றின் பல நூற்றாண்டுகளாக பேணி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த எந்த சக்தியாலும் முடியாது. இருப்பினும் சிலர் (ராகுல் காந்தி) நமது நாட்டை பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் நிறுத்துகிறார்கள். அத்தகையவர்கள் பசவேஸ்வரா, கர்நாடக மக்கள், இந்தியாவின் பழமையான கலாசாரம், நாட்டின் 130 கோடி மக்களை அவமதிக்கிறார்கள்.

இரட்டை என்ஜின் அரசு

இதுபோன்றவர்களிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக அளவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில் சிலர் அன்னிய மண்ணில் நமது நாட்டை குறை சொல்கிறார்கள். 'ஹை-டெக்' இந்தியாவின் என்ஜின், கர்நாடகம். இந்த என்ஜின் இரட்டை என்ஜின் அரசின் பலத்தை பெற வேண்டிது முக்கியம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசும்போது, இந்தியா ஜனநாயகத்தின் அடித்தளம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா, கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று ராகுல் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story