'சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளி தான்' - பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜெத்மலானி


சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளி தான் - பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜெத்மலானி
x
தினத்தந்தி 4 Aug 2023 9:24 PM IST (Updated: 4 Aug 2023 9:29 PM IST)
t-max-icont-min-icon

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியால் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப முடியும் என்று மகேஷ் ஜெத்மலானி கூறினார்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது 'மோடி' என்ற சமூகத்தின் பெயர் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்ததாகக் கூறி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூர்த் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதன் மூலம் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளி தான் என்று புர்னேஷ் மோடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யுமான மகேஷ் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு இன்று நிறுத்தி வைத்தாலும், சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான். இருப்பினும் அதிகபட்ச தண்டனைக்கான காரணங்கள் போதுமானதாக இல்லாததால், ராகுல் காந்தியின் தண்டனைக்கான விளைவுகள், அதாவது தகுதி நீக்கம் போன்றவை நிறுத்தி வைக்கப்படும்.

மாஜிஸ்திரேட் கோர்ட்டின் தீர்ப்பு குற்றத்தை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனை வழங்குவதற்கும் போதுமானதாக இருந்தாலும், தற்போது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியால் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப முடியும்.

ஆனால் இது தொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் போது ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படும் என நம்புகிறேன். செஷன்ஸ் கோர்ட்டில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை அல்லது அபராதம் என எந்த தண்டனையும் வழங்கப்படலாம். ஆனால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மிகவும் வலுவானவை. ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்க முடியாது" என்று தெரிவித்தார்.


Next Story