ராகுல் காந்தி பாதயாத்திரை 100 நாள் இமாசல பிரதேச முதல்-மந்திரி பங்கேற்பு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று 100 நாட்களை நிறைவு செய்தது.
டவுசா,
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று 100 நாட்களை நிறைவு செய்தது. ராகுல் காந்தியுடன் இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சேர்ந்து நடந்தார்.
இந்திய ஒற்றுமை பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது. இதுவரை 2,800 கி.மீ.க்கு மேல் கடந்திருக்கும் இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.
பாதயாத்திரையின் 100-வது நாளையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) வேணுகோபால் நேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
இமாசல பிரதேச முதல்-மந்திரி
அவருடன் இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங், துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிகோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் மற்றும் அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் யாத்திரையில் பங்கேற்றனர்.
இதைப்போல இமாசல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்பட ஏராளமான தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தனர்.
100-வது நாளான நேற்று ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்துக்கு உட்பட்ட மீனா ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.
மிகப்பெரிய சாதனை
ராகுல் காந்தியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோதே, பொதுச்செயலாளர் வேணுகோபால் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியதில் இந்திய ஒற்றுமைப்பயணம் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது' என்றார்.
ராகுல்காந்தியின் புகழை கெடுப்பதற்கு பா.ஜனதா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து விட்டதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி முதல் கட்சி மேற்கொள்ளும் தொடர் பிரசாரத்தின் மூலம் இந்திய ஒற்றுமை பயணத்தின் செய்தி பரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரசார் கொண்டாட்டம்
ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டியதையொட்டி நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து ராஜஸ்தானை எட்டியுள்ள இந்த பாதயாத்திரை வருகிற 24-ந்தேதி டெல்லிக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் வழியாக காஷ்மீரை அடையும்.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று நடந்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.