மணிப்பூர் சென்றடைந்தார் ராகுல் காந்தி..!
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றடைந்துள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது.
மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று முன்தினம் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றடைந்துள்ளார். இன்று மற்றும் நாளை மணிப்பூரில் இருக்கும் ராகுல் காந்தி அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து ராகுல் காந்தி பேச உள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றது குறிப்பிடத்தக்கது.