சீக்கியர்கள் குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு - மத்திய மந்திரி கண்டனம்
சீக்கியர்கள் குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஆன பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை ஆகும். டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகருக்கு சென்ற ராகுல் காந்திக்கு அங்கு இருக்கும் இந்திய வம்சாவளியினரும், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் சிக்கியர்கள் டர்பன் அணிவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;-
"ராகுல் காந்தியின் இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானதாக தெரிகிறது. 1984-ல் சீக்கிய சமூகத்திற்கு எதிராக காங்கிரஸ் ஒரு படுகொலையை நடத்தியது. அதில் 3,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
ராகுல் காந்தி எப்போதும் தனது பேச்சில் உறுதியாக இருந்ததில்லை. அவர் அறியாமையில் பேசி வருகிறார். வேற்றுமையில் ஒற்றுமையே நமது தேசிய அடையாளம். ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவற்றை உள்ளடக்கிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.
இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணிவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்த அரசாங்கம் சீக்கிய சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை தீர்க்க பெரும் முயற்சி எடுத்து வருவதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். 1947-க்குப் பிறகு சீக்கியர்கள் எப்போதும் இந்த அளவிற்கு பாதுகாப்பாகவும், கவுரவமாகவும் உணர்ந்ததாக நான் நினைக்கவில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.