கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கினார்; குண்டலுபேட்டையில் உற்சாக வரவேற்பு
ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை கர்நாடகத்தில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பெங்களூரு:
ராகுல் காந்தியின் பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' (ஒற்றுமை) பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று காலை கர்நாடகத்திற்குள் நுழைந்தது. அப்போது சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டையில் ராகுல் காந்திக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை முரசு கொட்டி ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். மேலும் நிர்வாகிகள் அவரிடம் பிரமாண்ட தேசிய கொடியை கையில் கொடுத்தனர்.
நடைபயணம்
இந்த விழாவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., கன்னட இலக்கியவாதி தேவனூர் மகாதேவா, காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு பாதயாத்திரை குண்டலுப்பேட்டையில் இருந்து தொடங்கியது. இதில் ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நடைபயணம் செய்தனர். அங்கிருந்து பென்டேஹள்ளி வழியாக நடைபயணமாக ராகுல்காந்தி பேகூருக்கு வந்தார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தபடி நடைபயணத்தை மேற்கொண்டார்.
பேகூரில் தங்கினார்
கர்நாடகத்தின் பிரசித்தி பெற்ற கலை நிகழ்ச்சிகள், மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தியுடன் இளைஞர், இளம்பெண்கள், சிறுவர், சிறுமிகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நேற்று இரவு அவர் பேகூரில் தங்கினார்.
இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கலலேயில் தங்குகிறார். உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி அந்த மாவட்டத்தில் இன்று நடைபயண்ம மேற்கொள்வதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குண்டலுப்பேட்டையில் தொடங்கிய பாதயாத்திரையை ராய்ச்சூரில் ராகுல்காந்தி நிறைவு செய்கிறார். அவர் கர்நாடகத்தில் 21 நாட்களில் 511 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.