வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஜூன் 29, 30 தேதிகளில் செல்கிறார் ராகுல் காந்தி
கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஜூன் 29, 30 தேதிகளில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த மாதம் 3-ந் தேதி மணிப்பூரில் 'மெய்தி' பெரும்பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது.
கலவரம் நடந்து வரும் மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 24-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அமித்ஷா எடுத்துரைத்தார்.
இந்நிலையில் இரண்டு நாள்கள் பயணமாக ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்.
மணிப்பூர் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, மேலும் சமூகம் மோதலில் இருந்து அமைதிக்கு நகரும் வகையில் ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனிதாபிமான செயலுக்கானது. வெறுப்புக்கானது அல்ல, அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு" என்று அதில் கே.சி.வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.