"ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார்" - ஆசிர்வாதம் செய்த கர்நாடக துறவி
ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என்று கர்நாடக துறவி ஒருவர் ஆசிர்வாதம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்கா (பெங்களுரு),
கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு 75-வது வயதையொட்டி பிறந்த நாள் பவள விழாவை அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பவள விழா தாவணகெரேயில் இன்று நடந்தது. மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். இதற்காக அவர் நேற்று கர்நாடகம் வந்தார்.
இந்த சூழலில் கர்நாடாவில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பொறுப்பு யாருக்கு என்பதில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சித்தராமைய்யாவுக்கும், கட்சியின் மாநில தலைவர் சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனால், கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகா வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சித்தராமைய்யாவின் 75வது பிறந்த நாள் விழாவில் இன்று பங்கேற்றார். மேலும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றுமாறு அவர் மூத்த தலைவர்களைக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த பயணத்தின்போது சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்திக்கு திருநீறு அணிவித்து ஆசீர்வதித்தார். அப்போது, ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என அவர் ஆசீர்வதித்ததார். அப்போது, மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா ஷாரனரு குறுக்கிட்டு, "தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்... இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்" என்று கூறினார்.
சித்ரதுர்காவில் உள்ள அந்த மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானதாகும். கர்நாடகாவில் 17 சதவீதம் லிங்காயத்துகள் உள்ளனர். இவர்கள் வழக்கமாக பாஜகவையே ஆதரிப்பார்கள்.
இந்நிலையில், மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவரின் ஆசீர்வாதம் குறித்த தகவல் சர்ச்யை ஏற்படுத்தியதை அடுத்து விளக்கம் அளித்த மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருக ஷாரனரு, மடத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கமானதுதான் என்று தெரிவித்தார்.