தெலுங்கானா: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் - இன்று ஓய்வு நாள்
தெலுங்கானாவில் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ் நேற்று கலந்து கொண்டு நடந்தார்.
ஐதராபாத்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், தற்போது தெலுங்கானாவில் நடந்து வருகிறது. இதில் ராகுல் காந்தியுடன், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த பாதயாத்திரையின் 57-வது நாளான நேற்று ஐதராபாத்தின் புறநகர் பகுதியான படன்செருவில் இருந்து இந்த பயணம் தொடங்கியது. இரவில் சங்காரெட்டி மாவட்டத்தின் சிவம்பேட்டில் நிறைவடைந்தது.
முன்னதாக சிவம்பேட் பாலத்தில் தெருமுனை கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
மனைவியுடன் பங்கேற்பு
தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று 9-வது நாளாக நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி, மக்களவை எம்.பி. உத்தம் குமார் ரெட்டி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி ராம்தாஸ், நேற்றைய பாதயாத்திரையில் கலந்து கொண்டார். அவர் தனது முதிர்ந்த வயதிலும் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் 57-வது நாளில் கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ், தனது மனைவியும், முதல் கடற்படை தளபதி கட்டாரியின் மகளுமான லலிதாவுடன் கலந்து கொண்டார். தனது 89-வது வயதிலும் பொது பிரச்சினைகளுக்காக ராம்தாஸ் பிரசாரம் செய்து வருகிறார்' என குறிப்பிட்டு இருந்தார்.
இன்று ஓய்வு
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரை நோக்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 57 நாட்களை நிறைவு செய்து உள்ளது. இந்த பாதயாத்திரைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட பாதயாத்திரை செல்வோர் அனைவரும் இன்று ஓய்வு எடுக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் பாதயாத்திரை தெலுங்கானாவில் தொடரும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.